Tuesday, March 28, 2006

தேடாதே, தொலைந்துபோவாய்!

தேடாதே,
தொலைந்துபோவாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
ப்ரபஞ்சத்தின் இரகசியத்தை
படைப்பின் மூலத்தை
இறைமை தத்துவத்தை
தேடாதே,
தொலைந்துபோவாய்!
எது உண்மை?
எது பொய்?
தேடாதே,
தொலைந்துபோவாய்!

வாழ்க்கை யெனும்
சிறு புள்ளியில் நின்றுகொண்டு
ஆகாயத்தின் அகலம்
ஆய்பவனே!
தேடாதே,
தொலைந்துபோவாய்!

தேடிச்சென்றவர்
வென்றதில்லை
விடைகண்டதாய்ச் சொன்னவர்
யாருமில்லை!
விடைபோல் விடைகள்
பலவுண்டு தத்துவமென்று,
பயனென்ன?
விடைகளின் முடிவில்
நிற்பதென்னவோ
கேள்விக் குறிகள்!

ஒன்று
கேள்வியின் சுழலில்
சிதைந்து போகிறார்
இல்லை
விடையின் ப்ரவாகத்தில்
கரைந்து போகிறார்
ஆதலினால்
தேடாதே,
தொலைந்துபோவாய்!

எல்லாம் ஒன்றென்பார்
மனதில் பல காண்பார்
பலப் பல இருந்தாலும்
ஒன்றில் அடங்கிடும்
நிலையும் காண்பார்
இதுதான்
உண்மை யென்பார்
அதுதான்
உண்மையென்று
யார் கண்டார்?

அறிவின் மூலைக்குள்
பதுங்கிக்கொண்டு
தத்துவ வலை
பின்னுவார் - பின்
தன் வலையில்
தானே சிக்கி
மீளத்தெரியாது புலம்புவார்
துவளுவார்!

நித்ய உண்மையென்று
ஏதுமற்ற இப்பெருவெளியில்
ஆணவ அறிவுகொண்டு
தேடாதே,
தொலைந்துபோவாய்!

5 Comments:

Blogger inlivenout said...

தொலைந்து போகத்தானே வந்திருக்கிறோம்! தேடல் இன்றி தெளிவு பிறக்காது, பாழ்.

Tue Mar 28, 12:40:00 PM PST  
Blogger sathesh said...

வருகைக்கு நன்றி ILO,

//தொலைந்து போகத்தானே வந்திருக்கிறோம்!//

தொலைந்து போகத்தான் வந்திருக்கிறோமா?

//தேடல் இன்றி தெளிவு பிறக்காது//

தொலைந்துவிட்டபின் தெளிவு பிறந்தென்ன..?

இதுவரை இந்த பூமியில் எத்தனை எத்தனை தேடல்கள்...நானும் தேடத் தயார், ஆனால் அது எனக்கு மட்டுமான விடை தருவதாய் எனக்கு மட்டும் தெளிவு கொடுப்பதாய்தான் இருக்குமெனில் அந்த விடையை தெளிவை நான் பிறரோடு பகிராமல் தொலைவேன் எனில் அந்த தேடலில் அர்த்தமிருப்பதாய் எனக்கு தோன்றவில்லை...

Tue Mar 28, 08:16:00 PM PST  
Blogger வித்யாசாகரன் (Vidyasakaran) said...

பாழ்,

வழக்கம் போல இந்தக் கவிதை என்னை ஒரு தேடலில் தள்ளி விட்டு விட்டது. மன்னிக்கவும்.
இணைப்பு: http://vidyasa.blogspot.com/2006/04/blog-post_11.html

-வித்யா

Tue Apr 11, 04:05:00 AM PDT  
Blogger sathesh said...

வருகைக்கு நன்றி வித்யாசாகரன்...

Mon Apr 17, 07:44:00 AM PDT  
Blogger -ganeshkj said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

தேடியதால் தான் பல விஷயங்களை கற்றிருக்கிறோம்; பல சாதனைகள் புரிந்திருக்கின்றோம். யார் யாரோ வாழ்நாள் முழுவதும் தேடியதை இன்று நாம் வசதியாக அனுபவிக்கின்றோம். ஆக தேடலில் நிச்சயம் பலன் உண்டு. அதே சமயம் எதையும் தேடிவிடலாம் என்று எண்ணும் போது தான் சறுக்கல் நேருகிறது. மிக மிகச் சிறியதுமாய், மிக மிகப் பெரியதுமாய் வாழ்க்கையும், பிரபஞ்சமும் இரகசியங்கள் நிரம்பியதாய் இருக்கிறது. எல்லாவற்றையும் தேடத் துவங்கி விட்டால், தொலைந்து தான் போய் விடுவோம் எனத் தோன்றுகிறது.

பிறந்த கணத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பல்வேறு தேவைகளுக்காக பலரைச் சார்ந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. அதன் பொருட்டு பல கடமைகளை, பலரது நியாயமான எதிர்பார்ப்புகளை சுமந்தவனாகத் தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறான். அந்த கடமைகள், எதிர்பார்ப்புகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு முரட்டுத் தேடல்களில் வாழ்க்கையை தொலைப்பதை நியாயப்படுத்த முடியாது.

இப்படியாக நிறைய யோசிக்க வைத்தது இந்தக் கவிதை. Good Job :))

Tue Feb 06, 04:16:00 PM PST  

Post a Comment

<< Home