Saturday, May 13, 2006

விதைக்குள் சிறையென்ன...

கனவின்றி வாழ்க்கையில்லை
கனவிற்குள் வாழ்க்கையில்லை
கனவொன்றே வாழ்க்கையில்லை

உன்னை உணர்ந்து
மனதை அகழ்ந்து
உழுது
கனவை விதைத்து
வியர்வை தெளித்து
பாரு

உனதான வாழ்க்கைக்கு நீ
உன்
சுவடாலே பாதையிடு

ஏங்கினால்...
தீருமா...
ஏங்கினால் நீகொண்ட
தாகம் தீர்ந்திடுமா
ஏக்கத்தில் தீர்ந்திடுமா
உன் ஆயுள்...

விதைக்குள் சிறையென்ன
மண்ணை
நீவெல்ல வா!

Saturday, May 06, 2006

வாழ்க்கை!

இந்த பிறவி
வாழ்வதற்கே
நிச்சயம்
யாரும் வாழலாம்
எப்படியும்!
நீ
வாழ வேண்டுமென்றால்
வாழ்ந்தேயாக வேண்டுமென்றால்

ஏன் வாழவேண்டும்?
என்று
இதயத்தின் மூலையில்
சலிப்பின்
விரக்தியின்
அவநம்பிக்கையின்
முனகலாய்
ஒரு கேள்வி
கேட்டுவிட்டால் போதும்
மரணம்
பக்கம் வந்து
பல்லிளிக்கும் - பின்
வாழ்வின் பாதையில்
உன்
காலடி பதியும்
திசையெலாம் தோன்றி
தன்
பள்ளத்தாக்கின் அழகை
வர்ணிக்கும்

சிகரத்தின் விளிம்பினும்
பள்ளத்தின் ஆழம்
மனதை மயக்கும்
உன்னை இழுக்கும்

ஏறுவது கடினம்
விழுவது சுலபம்
வேறெதில் உன்
கவனம் இருக்கும்?

Saturday, April 29, 2006

நான் உணர்வு!

இன்று
நான் என
உணரும் அது (எது?)
உடலின் அழிவிற்கு பின்
யாரென அல்லது
எதுவென
உணரும் தன்னை?

எழுதப்படாத கவிதை!

பட்டாம்பூச்சியாய்
பரிணமிக்கத் தெரியாமல்
மனதுள் நெளிகிறது
இதயச்சுவரை குடைகிறது
புழுவாய்
ஒரு
உணர்வு!

Tuesday, March 28, 2006

தேடாதே, தொலைந்துபோவாய்!

தேடாதே,
தொலைந்துபோவாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
ப்ரபஞ்சத்தின் இரகசியத்தை
படைப்பின் மூலத்தை
இறைமை தத்துவத்தை
தேடாதே,
தொலைந்துபோவாய்!
எது உண்மை?
எது பொய்?
தேடாதே,
தொலைந்துபோவாய்!

வாழ்க்கை யெனும்
சிறு புள்ளியில் நின்றுகொண்டு
ஆகாயத்தின் அகலம்
ஆய்பவனே!
தேடாதே,
தொலைந்துபோவாய்!

தேடிச்சென்றவர்
வென்றதில்லை
விடைகண்டதாய்ச் சொன்னவர்
யாருமில்லை!
விடைபோல் விடைகள்
பலவுண்டு தத்துவமென்று,
பயனென்ன?
விடைகளின் முடிவில்
நிற்பதென்னவோ
கேள்விக் குறிகள்!

ஒன்று
கேள்வியின் சுழலில்
சிதைந்து போகிறார்
இல்லை
விடையின் ப்ரவாகத்தில்
கரைந்து போகிறார்
ஆதலினால்
தேடாதே,
தொலைந்துபோவாய்!

எல்லாம் ஒன்றென்பார்
மனதில் பல காண்பார்
பலப் பல இருந்தாலும்
ஒன்றில் அடங்கிடும்
நிலையும் காண்பார்
இதுதான்
உண்மை யென்பார்
அதுதான்
உண்மையென்று
யார் கண்டார்?

அறிவின் மூலைக்குள்
பதுங்கிக்கொண்டு
தத்துவ வலை
பின்னுவார் - பின்
தன் வலையில்
தானே சிக்கி
மீளத்தெரியாது புலம்புவார்
துவளுவார்!

நித்ய உண்மையென்று
ஏதுமற்ற இப்பெருவெளியில்
ஆணவ அறிவுகொண்டு
தேடாதே,
தொலைந்துபோவாய்!

Tuesday, February 28, 2006

நீயாகிய நீ!

நீயான வெளியில்
நீயான மண்ணில்
நீயான செடி பூத்த
நீயான மலர் பறித்து
நீயெனப்படுஞ் சிலைக்கு
நீயாகிய மனிதன்
பூஜித்துத் தொழுகிறான்
தன்னை!

(வேறு)

நீ
உன்னில்
உன்னால்
உனைக் கொண்டு
உனக்கே
செய்வதேன் பூஜை!
தொழுது கொள்வதேன்
உன்னை!
வேடிக்கைதான்
நீயேயாகிய நீ!

Monday, February 06, 2006

என்னுள் நீ!

சில காலம்
உன்னை
சிந்தித்ததே இல்லை
சிந்தித்தபோது
ஏற்பதா மறுப்பதா
தெரியவில்லை

தெரிந்தபோது

ஏற்கவில்லை
மறுக்கவுமில்லை

காலம் மாற

நான் மாற
என்னுள் நீயும்

நேசித்தேன்

நிந்தித்தேன்
பித்தனாய் உன்
நினைவில் அலைந்தேன்

வாழ்வின் துன்பங்கள்
தந்த இரணத்தில்
உன்னை
ஏசி உமிழ்ந்தேன்
நீ
இருந்தாலும்
இல்லாமல் போனாலும்
இனி கவலையில்லை
என்றே
தூர எரிந்தேன்

ஆறுதல் இல்லா
போதுகளில்
அமைதியற்று திரிகையில்
தேடி களைத்து
சோர்ந்து விழும் போதெல்லாம்
வேறெங்கே
உன் மடிதேடி விழைந்தேன்
குழந்தையாய் குழைந்தேன்
உனக்கு மட்டுமே
புரியும்படி
நீ மட்டுமேஅறியும்படி
உடல் கரைய
உள்ளம் கரைய
நான் தொலைய
அழுதேன்

போடா! பரமா!

உன்னை எனக்கு
நேசிக்கவும் தெரியவில்லை
வெறுக்கவும் தெரியவில்லை

நீ படைத்த பிழைகளை
ஏற்கும் பக்குவம்
எனக்கில்லை
உன்னை தவிர்த்து
வாழவும்
வலிமை எனக்கு
போதவில்லை

உனக்கென்ன

நான்
நல்ல வேடிக்கைதான்
வேறு கதியில்லை என்று
உள்ளம் குமுற
உன்முன் வந்துவிழுவது - உனக்கு
நல்ல கேளிக்கைதான்!

Thursday, February 02, 2006

பிஞ்சு மலர்கள்

கிழிந்து விரிகின்றன
பிஞ்சு மலர்கள்

மலரென்ற ஜென்மம்
பாவமாக
மலர்கின்ற அனுபவம்
சோகமாக

எச்சில் கன்னத்தில்
தூய கண்ணீர்
நிலைகண்டு நொந்ததோ
வலிகண்டு நொந்ததோ
இரணங் கண்டு
வடிந்தென்ன - அதையும்
காமங் கொண்டுதானே
நக்கும்
மலம் மேயும் பன்றிகள்...