Sunday, November 13, 2005

நீ பிழையற்றவன் இல்லை!

நீ
பிழையற்றவன் இல்லை
உன் படைப்பில் கண்டேன்!
தத்துவத்தில்
வலிகள் ஆறுவதில்லை
இறையே!-எனக்குன்
வேதாந்தம் தேவையில்லை

தூய்மையில் நஞ்சினை
கலக்கவிட்டது யார்?
நஞ்சினை படைத்தது யார்?

வறுமைக்கு காரணமானவர்க்கே
உழைத்து
வயிறு வளர்க்கும்
அவலம்
இந்நிலைக்கு காரணமான
உன்னை தொழுதுதான்
இந்நிலை விட்டு
ஓடவேண்டுமா மனிதம்?
இரண்டுக்கும் பேதமில்லையே
இறைவா!
உன்னை நான் எதிர்ப்பதில்
பிழையில்லையே!

எதற்கும் காரணமுண்டாம்
அதை நான் என்னென்பது
காரணத்தோடு பிழைசெய்யலாமோ?
அது நீயே ஆனாலும்
இறைவா!
வலி சுமப்பது
நாங்கள்!

உன் நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்ட எதுயெதற்கோ
மனிதஜென்மமோ!
இல்லையிது
உன்
மிகப் பெருஞ்சிந்தனையின்
குறை பிரசவமோ!
அதற்கும் ஓர் காரணம்
சொல்லப்போகிறாயோ?
காரணத்தோடு பிழைசெய்யலாமோ
இறைவா!
வலி சுமப்பது
நாங்கள்!

தத்துவத்தில்
வலிகள் ஆறுவதில்லை
உன்
வேதாந்தம் ஏதும் தேவயில்லை.

மூட பரமா!


ஏக்கமா?
பசியா?
வேறேதும் இரணமா?
எதற்கென்றே தெரியாமல்
விழி நிறைந்த கண்ணீர்
ஏன் ஏந்துகிறோம்?
தெரியாமலேயே
முன் நீளும் பிஞ்சுக்கரம்
நாம் மட்டும் ஏனிப்படி
கேட்கவேண்டும்
என்றுகூட தோன்றாமல்
எச்சில் இலை நக்கும்
உரிமை பூ
உதிர்ந்த காம்புகள்!
ஏன்
அடிக்கப்படுகிறோம்?
நசுக்கப்படுகிறோம்?
விளங்காமலேயே
காம அரக்கனின்
கோரப்பல்லிடை சிதையும்
இளங்கன்றுகள்.

எத்தனையோ கோடி
இன்பம் வைத்தாயாமே பரமா!
அதில்
இவர்களுக்கான பங்கினை வழித்து
மொத்தமாய் யார் இலையில்
குவித்தாய்
சொல்லடா பரமா?
இன்பங்களின்
இவர் பங்கினை மறுத்தாய்
பரவாயில்லை
எவனெவனோ இன்பஞ்சுகிக்க
இவர்களையே ஏனடா
பந்திவைத்தாய்
மூட பரமா?

பிறன் தேவைக்கு
வண்ணஞ்சுரண்ட
முளைக்கும்போதே
பிய்க்கப்படும் வண்ணச்சிறகுகள்
தாம்
பட்டாம்பூச்சிகள் என்பதறியாமலேயே
தமக்கு
சிறகென்ற ஒன்று
உண்டென்பதறியாமலேயே
புழுக்களைக்கூட
ஏக்கமாய் பார்த்து
தவிதவித்து
துடிதுடித்து
தரையில் கிடக்கும்
உயிர்ப்பிண்டங்கள்!