Tuesday, February 28, 2006

நீயாகிய நீ!

நீயான வெளியில்
நீயான மண்ணில்
நீயான செடி பூத்த
நீயான மலர் பறித்து
நீயெனப்படுஞ் சிலைக்கு
நீயாகிய மனிதன்
பூஜித்துத் தொழுகிறான்
தன்னை!

(வேறு)

நீ
உன்னில்
உன்னால்
உனைக் கொண்டு
உனக்கே
செய்வதேன் பூஜை!
தொழுது கொள்வதேன்
உன்னை!
வேடிக்கைதான்
நீயேயாகிய நீ!

Monday, February 06, 2006

என்னுள் நீ!

சில காலம்
உன்னை
சிந்தித்ததே இல்லை
சிந்தித்தபோது
ஏற்பதா மறுப்பதா
தெரியவில்லை

தெரிந்தபோது

ஏற்கவில்லை
மறுக்கவுமில்லை

காலம் மாற

நான் மாற
என்னுள் நீயும்

நேசித்தேன்

நிந்தித்தேன்
பித்தனாய் உன்
நினைவில் அலைந்தேன்

வாழ்வின் துன்பங்கள்
தந்த இரணத்தில்
உன்னை
ஏசி உமிழ்ந்தேன்
நீ
இருந்தாலும்
இல்லாமல் போனாலும்
இனி கவலையில்லை
என்றே
தூர எரிந்தேன்

ஆறுதல் இல்லா
போதுகளில்
அமைதியற்று திரிகையில்
தேடி களைத்து
சோர்ந்து விழும் போதெல்லாம்
வேறெங்கே
உன் மடிதேடி விழைந்தேன்
குழந்தையாய் குழைந்தேன்
உனக்கு மட்டுமே
புரியும்படி
நீ மட்டுமேஅறியும்படி
உடல் கரைய
உள்ளம் கரைய
நான் தொலைய
அழுதேன்

போடா! பரமா!

உன்னை எனக்கு
நேசிக்கவும் தெரியவில்லை
வெறுக்கவும் தெரியவில்லை

நீ படைத்த பிழைகளை
ஏற்கும் பக்குவம்
எனக்கில்லை
உன்னை தவிர்த்து
வாழவும்
வலிமை எனக்கு
போதவில்லை

உனக்கென்ன

நான்
நல்ல வேடிக்கைதான்
வேறு கதியில்லை என்று
உள்ளம் குமுற
உன்முன் வந்துவிழுவது - உனக்கு
நல்ல கேளிக்கைதான்!

Thursday, February 02, 2006

பிஞ்சு மலர்கள்

கிழிந்து விரிகின்றன
பிஞ்சு மலர்கள்

மலரென்ற ஜென்மம்
பாவமாக
மலர்கின்ற அனுபவம்
சோகமாக

எச்சில் கன்னத்தில்
தூய கண்ணீர்
நிலைகண்டு நொந்ததோ
வலிகண்டு நொந்ததோ
இரணங் கண்டு
வடிந்தென்ன - அதையும்
காமங் கொண்டுதானே
நக்கும்
மலம் மேயும் பன்றிகள்...