Friday, January 27, 2006

உறவு!

நேற்று
புன்னகையில் அலர்ந்த
முகங்கள் - இன்று
வெறுப்பில் சுருங்குவதேன்!!

என்னை வரவேற்க
அவர் பாதையில்
தோரணங் கட்டியவர்கள்
வாசலின்
நிழலில் மறைந்துகொண்டு
தமை இல்லையென்று
ஜாடை காட்டுவதேன்!!

மறைந்து கொள்வதாய்
எனை
விழிமூடச் சொன்னவர்கள்
தொலைந்தே போனதேன்!!

அகம் வந்த உறவை
வாசல்வரை சென்று
வழியனுப்பினேன்
விட்டால் போதுமென்று
தலை தெறிக்க
ஓடுவதேன்!!

ஜீவனாய் சுரந்தனர்
என்னுள்ளே
என்றுமென் பயணம்
அவர் நினைவுடனே..
வெறும்
எச்சிலாய் சுரந்தேனோ
அவருள்ளே
உமிழ்ந்தபடி பயணம்
தத்தம்
திசையினிலே...

Thursday, January 26, 2006

யார் பிழை?

இயற்கையின் மொத்தத்திலும்
கண்டேன்
தூய்மை நிலை
மனிதனுக்கு மட்டுமிங்கே
என்ன குறை

அது வாக
படைத்ததெல்லாம்
அதுவாகி நிற்பதன்றி
வேறு கடமையில்லை
ஆதலினால்
அவையுள் ஏதும்
களங்கமில்லை

எது ஆக
இப்படைப்பென்றே
அறியாத மானுடம்
குறைகளின் வடிவமானது
யார் பிழை?

இலக்கினை
எங்கோ வைத்து
பாதையில் தேடவிட்டாய்
வழியெல்லாம் சகதி
மனிதரும்
தூய்மை கெட்டார்

நீ
வடித்த சிலைகளுள்
மனித சிலையுள் மட்டும்
பிழையா?
போடா போ!
உன்
உளி செய்த தவறுக்கு
சிலை மீது உமிழவோ?

Monday, January 23, 2006

எதையும் நேசிப்பதே வாழ்க்கை!

உன்னை
நேசிப்பவர் மட்டுமல்ல
வஞ்சிப்பவரோடும் சேர்த்துதான்
வாழ்க்கை!

நேசிப்பவரால் மட்டுமல்ல
வாழ்க்கை
வஞ்சிப்பவராலும்
அர்த்தப்படுகிறது...

நேசிப்பவரிலும் தவறிருக்கும்
வஞ்சிப்பவரிலும் நிறையிருக்கும்
இருவருக்குள்ளும்
உண்மை, பொய்
இரண்டுமிருக்கும்

நேசித்தவரே வஞ்சிப்பது
வாழ்வின் இரணங்களில்
உச்சம்!
வஞ்சித்தவரே
நம்மை நேசிப்பது
வாழ்வை அர்த்தப்படுத்தும்
இன்பம்!

நட்புடன்வஞ்சம்
கலந்திடில்
பகிர்ந்த நட்புக்காக
வஞ்சகம்
மன்னிக்கப்படட்டும்!
பகையோடு வஞ்சம்
உண்டாகிடில்
புரித லின்மைக்காக - அங்கு
வஞ்சகம்
இரங்கப்படட்டும்!

புரிந்து கொள்ளலின்
வெற்றியாய்
நேசமும் நட்பும்
அதன் தோல்வியாய்
பகையும் வஞ்சமும்
முனைந்தால்
தோல்வி வெற்றியாகும்
முன்வந்து பகையும்
நேசம் பேசும்

வஞ்சம் கொண்டோரையும்
நேசம் கொண்டழை
எதையும் நேசிப்பதே
வாழ்க்கை!

Friday, January 20, 2006

உதிரும் உறவு!

இருத்தலுக்குப் போராடி
போராட வலுவின்றி
சோர்ந்தது...

விடு
என்றபடி
இரணமின்றி கிடந்தது
கிளை...

விழுதல்
நன்மையே என்பதால்
மகிழ்ந்தே நின்றது
மரம்...

பாவம்
தேவையின் கைவிடலுக்கு
இலக்காகி
காற்றின் இழுப்புக்கு
இறையாகி
அரற்றியபடி...
நேற்று
உறவுக்குத் தளிராகி
இன்று
உறவுக்காகச் சருகாகி

உதிர்ந்தது

ஒரு சோக கவிதையாய்
உறவை தொலைத்த
இலை...

Thursday, January 19, 2006

...காத்திருக்கிறேன்!

ஒரு
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று நம்பி
காத்திருக்கிறேன்
நான் பயணம்போக
ஒரு தேர்
வருமென்று.

கடந்து போனது
பல தேர்கள்
எதிலும்
எனதான இடம்
காணவில்லை

"அடுத்தவர் போவது
உனக்கெதற்கு
உனதேயானது வரும்
பாதை பார்த்திரு"

நிஜங்கள் பொய்க்கும்போது
பொய்கள்தானே
சுகம்தரும் ஆறுதல்

வருமெதையும் விமர்சித்தபடி
இவையெல்லாம் எனதிலையென்று
ஆணவத்துடன் புலம்பியபடி

ஒரு
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று வகுத்து
...காத்திருக்கிறேன்!

Sunday, January 15, 2006

நாளை!

இன்று முடிந்தால்
நாளை வருமென
காத்திருந்தேன்
கனவு தேய்ந்து
நான்
மெல்ல விழிக்கையில்
அழகுடன் பூத்திருந்தது
காலை!

நாளை வந்ததென
குதித்தெழுந்தேன்
வெளியே
கண்சிமிட்டி நின்றது
அதே இன்று!

ஏதும் புரியாமல்
நின்றேன்
'இது இன்றா நாளையா?'
போவோரைக் கேட்டேன்
இன்றென்றார்
இன்று முடிந்தால்
வரும்
நாளையென்றார்

பல
இன்றுகளாய் காத்திருக்கிறேன் - என்
நாளையை எதிர்பார்த்து - ஆனால்
இன்று முடிந்தும்
மீண்டும்
இன்றே வருவதேன்?

Saturday, January 14, 2006

சருகுகள்!

வீழ்தலில்
சுகம் கண்டு விட்டாய்
இலையே! - இனி
நிலம் நிறைக்கும்
சருகுகள்!
ஏன் வீழ்ந்தாய்?
வீழ்கையில் விழும்
மறித்த செவியில்
கேள்விகள்!

உனக்கா தெரியாது - இனி
பதில் சொல்ல!
ஆயிரம் உண்டே காரணங்கள்
பதிலென்றாக!

காலத்தின் கோலம்
காற்றின் வேகம்
கோடரியின் தாக்கம்
வேரோடு மண்கொண்ட பேதம்
மரமேறும் பாதம்
காதல் பறவைகளின் சில்மிஷம்
இன்னும் இன்னும்

உனக்கா தெரியாது
பதில் சொல்ல! - இலையே
வீழ்தலில்
சுகம் கண்டு விட்டாய்
இனிநிலம் நிறைக்கும்
சருகுகள்!