Tuesday, March 28, 2006

தேடாதே, தொலைந்துபோவாய்!

தேடாதே,
தொலைந்துபோவாய்!
வாழ்க்கையின் அர்த்தத்தை
ப்ரபஞ்சத்தின் இரகசியத்தை
படைப்பின் மூலத்தை
இறைமை தத்துவத்தை
தேடாதே,
தொலைந்துபோவாய்!
எது உண்மை?
எது பொய்?
தேடாதே,
தொலைந்துபோவாய்!

வாழ்க்கை யெனும்
சிறு புள்ளியில் நின்றுகொண்டு
ஆகாயத்தின் அகலம்
ஆய்பவனே!
தேடாதே,
தொலைந்துபோவாய்!

தேடிச்சென்றவர்
வென்றதில்லை
விடைகண்டதாய்ச் சொன்னவர்
யாருமில்லை!
விடைபோல் விடைகள்
பலவுண்டு தத்துவமென்று,
பயனென்ன?
விடைகளின் முடிவில்
நிற்பதென்னவோ
கேள்விக் குறிகள்!

ஒன்று
கேள்வியின் சுழலில்
சிதைந்து போகிறார்
இல்லை
விடையின் ப்ரவாகத்தில்
கரைந்து போகிறார்
ஆதலினால்
தேடாதே,
தொலைந்துபோவாய்!

எல்லாம் ஒன்றென்பார்
மனதில் பல காண்பார்
பலப் பல இருந்தாலும்
ஒன்றில் அடங்கிடும்
நிலையும் காண்பார்
இதுதான்
உண்மை யென்பார்
அதுதான்
உண்மையென்று
யார் கண்டார்?

அறிவின் மூலைக்குள்
பதுங்கிக்கொண்டு
தத்துவ வலை
பின்னுவார் - பின்
தன் வலையில்
தானே சிக்கி
மீளத்தெரியாது புலம்புவார்
துவளுவார்!

நித்ய உண்மையென்று
ஏதுமற்ற இப்பெருவெளியில்
ஆணவ அறிவுகொண்டு
தேடாதே,
தொலைந்துபோவாய்!